சென்னை: சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண்ணின் உயிர் காக்க வேலூரிலிருந்து மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் எடுத்து வரப்பட்டது. சுமார்  90 நிமிடங்களில் அந்த இதயம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு உறுதுறையாக பணியாற்றிய போக்குவரத்து காவல்துறையினர், ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவமனை ஊரியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சாலை விபத்தில்  சிக்கி பலத்த காயமுற்ற 20 வயது இளைஞர் வேலூர், சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்  மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அந்த இளைஞரின்  உடல் உறுப்புகளை தானமாக  வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இதையொட்டி அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

அவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட இதயம்  சென்னை  எம்ஜிஎம் மருத்துவமனையில் இருதய நோயால் பாதிக்கப்பட்டு மாற்று இருதயத்திற்காக காத்துக்கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு பொருந்தும் விகையில் இருந்தது. இதனால், அந்த இருதயத்தை வேலூரில் இருந்து சென்னை கொண்டு வர நடவடிகிகை எடுக்கப்பட்டது.

அதன்படி எம்ஜிஎம் மருத்துவமனையில்,  இதயம் நுரையீரல் மாற்று சிகிச்சை நிபுணர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், நேற்று காலை வேலூர் சென்று இளைஞரின் இதயத்தை பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு காலை 11.07 மணிக்கு சாலை மார்க்கமாக ஆம்புலன்ஸ் வாகனங்களில் சென்னை புறப்பட்டனர். ஆம்புலன்ஸ் வாகனம்  காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயில், கோயம்பேடு வழியாக அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு பகல் 12.35 மணிக்கு இதயம் கொண்டுவரப்பட்டது.

அங்கு இதய செயலிழப்புக்கு உள்ளாகி அனுமதிக்கப்பட்டிருந்த 34 வயதுப் பெண்ணுக்கு, அந்த இதயத்தை டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாகப் பொருத்தினர்.

இந்த பயணத்தின்போது,  சாலைப் போக்குவரத்தில் எந்த இடையூறும் ஏற்படாத வகையில், தடையற்ற வழித்தட (கிரீன் காரிடர்) வசதியைப் போக்குவரத்துக் காவல்துறையினர் வழங்கினர். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவரும் சாமர்த்தியமாக  அதிவேகத்தில் வாகனத்தை இயக்கி வந்ததும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.