டில்லி,
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்த 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல் படுத்த நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பரிந்துரைகளில் 34 வகையான சிறுசிறு மாற்றங்களுடன் அந்தப் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது மத்திய அமைச்சரவை.
இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு டி.ஏ., உள்ளிட்ட திருத்தப்பட்ட படிகளுடன் கூடிய முழு சம்பளம், ஜூலை மாதம் முதல் கிடைக்கும்.
நாடு முழுவதும் உள்ள, 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும், 51 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இந்த சம்பய உயர்வால் பயன்பெறுவார்கள்.
வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த ஊதிய மாற்றத்தினால், அரசுக்கு கூடுதலாக 30,748 கோடி ரூபாய் வருடத்துக்கு அதிகச் செலவாகும் என்று அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
மேலும், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்ததை அமல் செய்தால், 29,300 கோடிதான் செல வாகும். ஆனால், அமைச்சரவை அதில் சில மாற்றங்கள் செய்துள்ளதால், கூடுதலாக 1,448 கோடி ருபாய் செலவு ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாடகை, உடை போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்கு கூடுதலாக தொகை கணக்கிடப்பட்டுள்ளது.
‘பென்ஷன் பெறுவோருக்கான மருத்துவச் செலவு, கமிஷன் பரிந்துரைத்ததைவிட ஒரு மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
சம்பள கமிஷன் 500 ருபாய் பரிந்துரைத்திருந்த நிலையில், அதை 1,000 ஆக உயர்த்தியுள்ளது
மத்திய அரசு. மேலும், நக்சல் பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கும் அதிகப்படியான உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பள உயர்வு காரணமாக தற்போது நடைமுறையில் உள்ள, எம்.ஏ.சி.பி., எனப்படும், ‘மாற்றியமைக்கப்பட்ட உறுதியான பணி முன்னேற்றம்’ திட்டத்தின்படி, 10, 20, 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் ஊழியர்களின் சம்பளம், அடுத்த நிலைக்கு தானாகவே உயர்த்தப்படும்.
இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் குஷியான மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.