பனாஜி:

”மாட்டிறைச்சி சாப்பிடுவதை, கவுரவ சின்னமாக கருதுபவர்களை, பொது மக்கள் முன்னிலையில் துாக்கிலிட்டு கொல்ல வேண்டும்,” என்று, சாத்வி சரஸ்வதி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில்,  தலைநகர் பனாஜியில், அகில இந்திய இந்து மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 130 ஹிந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர்.

மாநாட்டை மத்திய பிரதேசத்தில் உள்ள சனாதன தர்ம பிரசார் சேவா சமிதியின் தலைவர், சாத்வி சரஸ்வதி துவக்கினார். அப்போது அவர் , “மாட்டிறைச்சி சாப்பிடுவதை, கவுரவத்தின் சின்னம் என கருதுபவர்களை, பொது மக்கள் முன்னிலையில் துாக்கிலிட்டு கொல்ல வேண்டும். அப்போது தான், கோமாதாவான பசுக்களை பாதுகாக்க வேண்டியது, நம் கடமை என்பதை  அனைவரும் உணர்வார்கள். இந்துக்களுக்கும், பாரத நாட்டுக்கும் இப்போது, அனைத்து திசைகளிலும் ஆபத்து சூழ்ந்து இருக்கிறது.  அமர்நாத் புனித யாத்திரையை தடுத்து நிறுத்தவும், ஒரு கூட்டம் அலைகிறது. பாரத மாதாவையும், கோமாதாவையும் காப்பாற்ற, வீடுகளில், இந்துக்கள், ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும்” என்று பேசினார்.

சாத்வி சரஸ்வதியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக் கட்சியின் , செயலர் கிரிஷ் சோடங்கர்,  ”சாத்வி சரஸ்வதியின் பேச்சு, மதக் கலவரத்தை துாண்டும் வகையில் உள்ளது. இந்த விஷயத்தில்,  கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான அரசு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சரஸ்வதி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்,” என்று தெரிவித்தார்.