டில்லி

தங்க ஆபரணங்களுக்கு வரும் ஜூன் 1 முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தங்க நகைகளில் சுத்தமான தங்கம் பயன்படுத்துவதற்கு உத்தரவாதம் அளிப்பது ஹால்மார்க் முத்திரை ஆகும்.  இந்த முத்திரை மூலம் சரியான விகித அளவில் தங்கம் சேர்க்கப்பட்ட தங்கத்தில் நகைகள் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நம்பிக்கை கொள்கின்றனர்.  எனவே இந்திய அரசு இந்த முத்திரையைக் கட்டாயம் ஆக்க பலமுறை முயன்றுள்ளது.

நேற்று நுகர்வோர் விவகார செயலர் லீனா நந்தன் தனது செய்தியாளர்கள் சந்திப்பில், “ஏற்கனவே பலமுறை தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஒத்திப் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு கோரி இதுவரை கோரிக்கைகள் எதுவும் வரவில்லை.

எனவே இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதில் பி.ஐ.எஸ் ஏற்கனவே முழு உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.  மேலும் ஹால்மார்க்கிங் செய்ய நகை விற்பனையாளர்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் பி.ஐ.எஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆகவே, நடப்பு ஆண்டு ஜூன் 1-ம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருள்களுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவது கட்டாயமாக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.