சென்னை:
2021 ஆம் ஆண்டு ஹஜ் மற்றும் உம்ரா செல்லும் பயணிகள் தனியார் டிராவல்ஸ் ஏஜென்ட்-களிடம் முன் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் அறிவுறுத்தி உள்ளார்.
ஹஜ் யாத்திரை குறித்து இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹஜ் மற்றும் உம்ராவுக்கு இதுவரை சவுதி அரசு இந்திய அரசுடன் எந்த ஒப்பந்தமும் ஏற்படுத்தவில்லை. கொரோனா பரவல் காரணமாக 2021 ஆண்டு ஹஜ் யாத்திரை குறித்து தீர்க்கமான முடிவை சவுதி அரசு இதுவரை எடுக்கவில்லை. இந்திய அரசும் சவுதி அரசும் இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திவிடவில்லை. எனவே எவ்வளவு கோட்டா ஒதுக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும்” இந்தியாவிலிருந்து சவுதிக்கு விமான போக்குவரத்தும் இதுவரை தொடங்கப்படவில்லை. சவுதி அரசு 2021 ஆண்டு ஹஜ் ஒதுக்கீட்டில் 20 சதவீதம் மட்டுமே இந்தியாவுக்கு ஒதுக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமற்ற செய்தி உலா வருகிறது. இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இதனிடையே மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி குறைந்தது 50,000 பேருக்காவது ஹஜ் பயண ஒதுக்கீடு கேட்டு சவுதி அரசிடம் வலியுறுத்தி உள்ளார். இதற்கும் அங்கிருந்து எந்த ஒப்புதலும் வரவில்லை. அதனால் 2021ஆம் ஆண்டு ஹஜ் செல்ல ஜனவரி 10ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம், அதற்கு 300 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும், வேறு எந்த முன்பணமும் அரசாங்கம் சொல்லும் வரை யாரும் கட்ட தேவையில்லை. தனியார் ஏஜென்ட்கள் நம்பி பணம் எதுவும் கொடுக்க வேண்டாம்” என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, “ பயணிகள் அனைவரும் காத்திருந்து இந்திய அரசும் சவுதி அரசும் என்ன முடிவெடுக்கிறது என்பதை தெளிவாக தெரிந்த பின்னர் பணம் கட்டினால் போதும். இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் பயணிகளை வெளிப்படையாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் முறை கொண்டு வரப்படும் என்று ஏற்கனவே சவுதி அரசு அறிவித்துள்ளது. இதை மனதில் கொண்டு ஹஜ் மற்றும் உம்ரா பயணிகள் செயல்பட வேண்டுமென்று” இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.