டில்லி:
கேரளா லவ் ஜிகாத் வழக்கு தொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றம் ஹாதியா கல்வி பயிலவும், அதற்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அகிலா என்கிற ஹாதியா என்பவரை மதம் மாற்றி ஷபின் ஜகான் என்பவர் திருமணம் செய்தார். இத்திருமணத்தை எதிர்த்து அசோகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம் இந்த திருமணம் அவசரமாகவும் ரகசியமாகவும் நடந்ததில் சந்தேகங்கள் உள்ளன.
இதில் ‘லவ் ஜிகாத்’ சதி இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று கூறி திருமணத்தை ரத்து செய்தது. இதனையடுத்து வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. ஹாதியா கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அவருடைய தந்தையின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவிட்டதன்படி ஹாதியா இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஹாதியா கூறுகையில், ‘‘கடந்த 11 மாதமாக நான் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளேன். நான் ஒரு நல்ல குடிமகனாக, டாக்டராக இருக்க வேண்டும். என்னுடைய நம்பிக்கையை உண்மையாக நேசிக்க வேண்டும்’’ என்றார்.
‘‘கேரளா அரசின் செலவில் நீங்கள் படிப்பை தொடர விரும்புகிறீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் “நான் படிப்பை தொடர விரும்புகின்றேன். என்னுடைய கணவர் என்னை பார்த்துக் கொள்ள இருக்கும் போது மாநில அரசின் செலவில் படிக்க விரும்பவில்லை’’என்றார்.
இதனையடுத்து ஹாதியா மருத்துவம் படிக்கும் சேலம் மருத்துவ கல்லூரியின் டீன் அவருக்கு பாதுகாவலராக இருக்க வேண்டும் . மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளவேண்டும். கல்லூரி நிர்வாகம் ஹாதியாவை விடுதியின் விதிகளின்படி மற்ற மாணவர்களை நடத்துவது போன்று நடத்த வேண்டும்.
கேரளா போலீஸ் ஹாதியாவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர் சேலம் பயணம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசு ஹாதியா மருத்துவ பயிற்சி காலமான 11 மாதங்கள் பாதுகாப்பை வழங்க வேண்டும்’’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.