தெற்கு பெருங்கடலில் உள்ள ஆஸ்திரேலியாவின் துணை கண்டமான அண்டார்டிக் ஹியர்ட் தீவில், யானை சீல்களில் அசாதாரணமான இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் அந்த பகுதியில் கொடிய H5 வகை பறவைக் காய்ச்சல் (Avian Influenza) பரவியிருக்கலாம் என்ற அச்சத்தை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் “RSV நுயினா” என்ற பனி உடைக்கும் கப்பலில் சென்ற விஞ்ஞானிகள், ஹியர்ட் தீவில் சீல்களில் நோய்க்குறிகளை கண்டறிந்தனர். அவர்கள் சேகரித்த மாதிரிகள் நவம்பர் நடுப்பகுதியில் ஆஸ்திரேலியா திரும்பும் போது சோதனைக்காக அனுப்பப்படவுள்ளன. அதன் பிறகே பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்படும்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் மற்றும் விவசாய துறை அதிகாரிகள் கூறியதாவது: “தற்போது பொதுமக்களுக்கு எந்த அச்சமும் இல்லை. H5 வகை பறவைக் காய்ச்சலிலிருந்து விடுபட்ட ஒரே கண்டம் ஆஸ்திரேலியா தான்.” தீவில் உள்ள பென்குயின் அல்லது பிற பறவைகளில் நோய்க்குறிகள் இதுவரை காணப்படவில்லை.
டாக்டர் ஜூலி மெக்கின்னஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, தீவின் தென்கிழக்கில் பல இறந்த யானை சீல் குட்டிகளை கண்டது. “மாதிரிகள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு கீலாங்கில் உள்ள ஆஸ்திரேலிய நோய் தடுப்பு மையத்தில் சோதிக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில் H5 வகை பறவைக் காய்ச்சல் பல கண்டங்களில் பரவி, ஆயிரக்கணக்கான கடல் பறவைகள் மற்றும் சீல்களை கொன்றது. 2023இல் அண்டார்டிக் தீபகற்பத்தில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை ஆஸ்திரேலியா மட்டுமே இந்த நோயிலிருந்து விடுபட்டிருந்தது.

உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி டாக்டர் மிச்செல் வில்லே கூறியதாவது, “இந்த வைரஸ் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது என்றாலும், மனித நோய்த்தொற்றுகள் மிகவும் அரிது.” கடந்த ஆண்டில் அமெரிக்காவில் 70 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன; அதில் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது.
தற்போது தனது துணை கண்டத்தில் H5 வகை வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளதால், ஆஸ்திரேலிய அரசு, பறவைக் காய்ச்சல் நாட்டு எல்லைகளுக்கு வராமல் தடுக்க 100 மில்லியன் டாலர் முதலீடு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது.