காரைக்குடி:

பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜாவின் காரைக்குடி வீட்டை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் ஒரு தாசி என ஆங்கில ஆய்வாளர் குறிப்பிட்டிருந்ததை, கட்டுரை ஒன்றில் பதிந்திருந்தார் திரைப்பாடலாசிரியர் வைரமுத்து.

இதற்கு இந்துத்துவ அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மிகக் கடுமையாக வைரமுத்துவை விமர்சித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் காரைக்குடியில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் நாம் தமிழர் கட்சி அறிவித்தது.

இதையடுத்து காரைக்குடியில் உள்ள ராஜாவின் வீடு மற்றும் பண்ணைக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்தது.

இந்த நிலையில் இன்று முற்பகம், நாம் தமிழர் கட்சியினர் எச்.ராஜாவின் வீட்டை முற்றுகை இட திரண்டு வந்தனர். அவர்களை மறித்து காவல்துறையினர், கைது செய்தனர்.

பாக்யராசன்

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பாக்யராசன், “மொத்தம் 192 பேரை கைது செய்திருக்கிறார்கள். அது பற்றி கவலை இல்லை.  பாடலாசிரியர் வைரமுத்துவைப் பற்றி அவதூறாக பேசியத்ற்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்கும் வரை நாம் தமிழர் கட்சியின் போராட்டம் தொடரும்.” என்று பாக்யராசன் தெரிவித்தார்.