கவுகாத்தி
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா (சிஏபி) எதிர்ப்புப் போராட்டத்தினால் கவுகாத்தி நகர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அசாம் மாநிலத்தில் போராட்டம் வலுவடைந்து கடும் வன்முறை வெடித்துள்ளது. அதையொட்டி கவுகாத்தி நகரம் உள்ளிட்ட பல இடங்களில் கடும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல இடங்களில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு அடைந்துள்ளது. மாநிலத்துக்கு வரும் அனைத்து போக்குவரத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. மொபைல் மற்றும் இணையச் சேவைகள் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சாலை வழியே வரும் அனைத்து காய்கறிகள், பழம், இறைச்சி உள்ளிட்ட பல உணவுப் பொருட்கள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் மாநிலத்தில் உணவுப் பொருட்கள் கிடைப்பது மிகவும் அரிதாகி உள்ளது. ஊரடங்கு சட்டத்தின் இடையே நேற்று மாலை சிறிது நேரம் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஒரு கிலோ கோழி ரு.500 எனவும் ஒரு கிலோ மீன் ரூ. 400க்கும் விற்கப்பட்டன. வழக்கமாக ஒரு கட்டு கீரை ரூ.10க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் நேற்று ஒரு கட்டு ரூ.60க்கு விற்பனை ஆனது.
அத்துடன் ஏடிஎம்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. அதிக அளவில் மக்கள் வந்து பணம் எடுத்ததால் பல ஏடிஎம்களில் உடனடியாக பணம் தீர்ந்து விட்டது. அந்த ஏடிஎம்களில் மீண்டும் பணம் நிரப்பப் படவில்லை. இணையச் சேவை இல்லாததால் டிஜிடல் பண வர்த்தனையும் நடைபெறாத நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று ஓரிரு இடங்களில் பாரத ஸ்டேட் வங்கி நடமாடும் ஏடிஎம்கள் மூலம் பணம் அளித்தது. இன்றும் அந்த சேவை தொடர உள்ளது.