கற்பழிப்பு வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் 20 நாள் பரோலில் நேற்று முன்தினம் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார்.
ஹரியானா தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் அவரது இந்த வருகை பாஜக-வினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் தேர்தல் நேரத்தில் தேரா சச்சா சவுதா சார்பில் ஏற்பாடு செய்யப்படும் சத்சங் எனும் பஜனை நிகழ்ச்சிகளில் தேர்தலில் தங்கள் ஆதரவு பாஜக-வுக்கு தான் என்று மேடையிலேயே அறிவிக்கப்பட்டதை அடுத்து குர்மீத் ராம் ரஹீம் வெளியில் வந்திருப்பது அக்கட்சியினரை உற்ச்சாகப்படுத்தியுள்ளது.
பாஜக-வினரின் இந்த எதிர்பார்ப்பை குர்மீத் ராம் ரஹீமும் ஏமாற்றாமல் காப்பாற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.
வியாழன் அன்று இரவு நடைபெற்ற நடைபெற்ற பஜனை கூட்டத்தில் பாஜக-வுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று அதில் கலந்து கொண்டவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த ராம் ரஹீம் தொண்டர்களை பாஜக-வுக்கு ஆதரவாக வாக்களிக்கச் சொல்ல வேண்டும் என்று தனது அமைப்பின் நிர்வாகிகளிடம் கூறியதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து வழக்கமாக மேடையிலேயே மைக் வைத்து தங்கள் ஆதரவை வெளிப்படையாக அறிவிக்கும் இந்த அமைப்பினர் இம்முறை பஜனை நிகழ்ச்சியின் போது தொண்டர்கள் மத்தியில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு தங்களைச் சுற்றி இருந்தவர்களின் காதில் பாஜக-வுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி ஜெபித்ததாகக் கூறப்படுகிறது.
11வது முறையாக பாஜக அரசால் ப்ரோல் வழங்கப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் ஒருவர் பாஜக-வுக்கு ஆதரவு தேடிய விவகாரம் ஹரியானா-வில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.