லண்டன்:
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் தொடங்கியது முதல், இஸ்லாமியர்கள் புனித நோன்பு கடைபிடித்து வரகின்றனர். இந்த நிலையில், லண்டனில் உள்ள செவன் கிங்ஸ் மசூதியில், ரமலான் தொழுகை நடைபெற்று வந்த வேளையில், மர்ம நபர் ஒருவர் மசூதிக்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
ஏற்கனவே கடந்த மாதம் நியூசிலாந்து மசூதியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் தொழுகை நடைபெற்று வந்த வேளையில் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில், தற்போது லண்டன் மசூதிக்கு வெளியே துப்பாக்கி சூடு நடைபெற்றது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனின் கிழக்கு பகுதியில் இல்போர்டில் செவன் கிங்ஸ் என்ற மசூதி உள்ளது. இங்கு ரமலான் சிறப்பு தொழுகையில் இரவு இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முகமூடி அணிந்தபடி கைத்துப்பாக்கியுடன் வந்த ஒருவன், துப்பாக்கியால் சுட்டபடி உள்ளே மசூதிக்குள் நுழைய முயன்ற போது, அவனை சிலர் சேர்ந்தது மடக்கி உள்ளனர். இதனால்,அந்த மர்ம நபர் அவர்களிடம் இருந்து தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்று காவல்துறையினர் அறிவித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து மசூதிக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.