ஆமதாபாத்,

தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி திரைப்படத்தை குஜராத்தில் திரையிட அனுமதிக்கப் போவதில்லை என்று அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.

ராஜபுத்திரர்கள் மற்றும் ஷத்ரிய இன மக்களின் வரலாற்றை சித்தரித்து காட்சிகள் படமாக்கப்பட்டி ருப்பதால், அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக ரூபானி கூறிஉள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி இந்தித் திரைப்படத்தை எற்கனவே மத்திய பிரதேச அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் தற்போது குஜராதும் தடை விதித்துள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி என்ற இந்திப் படத்தில்  பத்மாவதியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். ஷாகித் கபூர் ராணா ரத்தன் சிங் வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதின் கில்ஜி வேடத்திலும் நடித்துள்ளனர். சித்தூர் ராணி பத்மினியின் கதையை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் ராஜபுத்திர அரசியை அவமதிப்பதாக உள்ளதாக பல மாநிலங்களில் எதிர்ப்பு வந்துள்ளது.

சென்சார் போர்ட் தலைவர் பிரசூன் ஜோஷி இந்த திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்கும் முன் சில தலைவர்களுக்கு காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி சில ஆவணங்கள் இல்லை எனக் கூறி இந்த படத்துக்கு சான்றிதழ் கேட்டு கொடுத்த மனுவும் திருப்பி அளிக்கப்பட்டது.

ஆனால், இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை இரண்டு முறை நிராகரித் துள்ள நிலையில், பாஜக ஆளும் மாநிலங்கள் தொடர்ந்து தங்களது மாநிலத்தில் படத்தை வெளியிட தடை விதித்து வருகிறது.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் திரையிடக் கூடாது என தடை விதித்துள்ள நிலையில், தற்போது குஜராத் பாஜக அரசும், படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் விஜய்ரூபானி,  சட்டமன்ற  தேர்தல் நெருங்குவதால், எந்த ஒரு சர்ச்சையையும் மாநில அரசு விரும்பவில்லை என்றும், சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளதால் பத்மாவதி திரைப்படம் தற்போதைக்கு திரையிட அனுமதிக்கப்பட மாட்டாது என்றும்  கூறி உள்ளார்.