வடோதரா
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் 91 நாடுகளின் தேசிய கீதத்தை மனப்பாடமாக ஒப்பித்து சாதனை செய்துள்ளார்.
எந்த ஒரு செய்யுள் அல்லது பாடல்களை மனப்பாடமாக ஒப்பித்துச் சொல்வது ஒரு சிலருக்கு மட்டுமே முடியும் கலையாகும். குறிப்பாக அவ்வாறு செய்பவர்கள் தங்கள் தாய்மொழியில் மட்டுமே சாதனை புரிந்துள்ளனர். மறைந்த கிருபானந்த வாரியார், நடிகர் சிவகுமார் ஆகியோரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
ஆனால் பலருக்கு அவரவர் நாட்டுத் தேசிய கீதமே முழுமையாக மனப்பாடமாகத் தெரியாத நிலை உள்ள பரிதாபமும் உள்ளது. ஆனால் ஒரு 17 வயது இளைஞர் பல மொழிகளில் உள்ள பல நாட்டுத் தேசிய கீதங்களை மனப்பாடமாகச் சொல்வது அதிசயிக்கத்தக்கதாகும்.
குஜராத் மாநிலம் வடோதரா நகரில் வசிக்கும் 17 வயது இளைஞரான அதர்வ் மியூல் என்னும் இளைஞர் 91 நாடுகளின் தேசிய கீதங்களை மனப்பாடமாக ஒப்பிக்கிறார். இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பிரிட்டன் நாடுகளும் உள்ளிட்டவை ஆகும். இந்த அதிசய இளைஞர் குறித்த தகவல் வலைத்தளங்களில் வைரலாகின்றன.