பணியாளர்கள் அனைவரும் தேர்தலில் தவறாமல் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் 1000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் குஜராத் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுவரை சுமார் 233 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டிருக்கும் தேர்தல் ஆணையம் 1017 சிறு குறு நிறுவனங்களுடன் இதுபோன்ற ஒப்பந்தம் மேற்கொள்ள இருக்கிறது.
வாக்களிக்காத பணியாளர் பற்றிய விவரங்களை தங்கள் நிறுவன இணையதளம் மற்றும் அலுவலக அறிவிப்பு பலகைகளில் வெளியிடவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தேர்தலை காரணமாக கூறி விடுப்பு எடுக்கும் அனைத்து ஊழியர்களும் வாக்களிப்பதை உறுதி செய்வதோடு வாக்கு சதவீதத்தையும் உயர்த்த உதவும் என்று ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
குஜராத் சிறு குறு நிறுவன உரிமையாளர்களோ இதன் மூலம் விடுப்பு வழங்குவதை தவிர்த்து தங்கள் நிறுவன ஊழியர்களை சுழற்சிமுறையில் வாக்குச்சாவடிக்கு அனுப்பி வாக்களிக்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் வாக்களிப்பது கட்டாயம் இல்லை என்ற போதும் ஊழியர்களை மட்டும் கண்காணிக்கும் ஆணையம் நிறுவன உரிமையாளர்களும் வாக்களிக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் வாக்களிக்க வேண்டும் என்று ஊழியர்களை உரிமையாளர்கள் நிர்பந்தம் செய்வதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
500 ஊழியர்களுக்கு மேல் வேலை செய்யும் அரசு, பொதுத்துறை தனியார் மற்றும் வணிக நிறுவன ஊழியர்கள் வாக்களிப்பதை உறுதிசெய்ய நோடல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையில், தற்போது 100 அல்லது அதற்கு அதிகமான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களையும் இந்த திட்டத்தில் சேர்த்திருப்பதாக குஜராத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 135பி-யின்படி வாக்குப்பதிவு செய்யும் தினத்தை அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொது விடுமுறையாக அறிவிக்கப்படும்.
இந்த நிலையில் முதன் முறையாக குஜராத்தில் தேர்தலில் வாக்களிப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் புதிய முயற்சியை மேற்கொண்டு வருவது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.