மும்பை

கொரோனா பாதிப்புக்காக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றால் முதலில் குஜராத் மாநிலத்தில் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என சிவசேனா கூறி உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.  இங்கு 54758 பேர் பாதிக்கப்பட்டு அதில் 1792 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 16954 பேர் குணம் அடைந்து 36,012 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனால் மக்களிடையே கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக மும்பை நகரில் 32994 பேர் பாதிக்கப்பட்டு 1065 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நாராயண ரானே, “மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா அரசு கொரோனா பிரச்சினையைச் சரிவர் கையாளாமல் உள்ளது.  ஆகவே குடியரசுத் தலைவர் சிவசேனா தலைமையில் உள்ள கூட்டணி ஆட்சியை உடனடியாக கலைத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இது அரசியல் உலகில் பரபரப்பை உண்டாக்கியது.  இந்நிலையில் தேசியவாத  காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்  மாநில முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே மற்றும் மாநில ஆளுநரை சந்தித்தார்.  இதையொட்டி மகாராஷ்டிர கூட்டணி அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகச்  செய்திகள் பரவி பரபரப்பு மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத், “உத்தவ் தாக்க்ரே தஒஐமையிலான மகாராஷ்டிர அரசுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, வேண்டுமென்றே சிலர் புரளியைக் கிளப்புகின்றனர்.   கொரோனா பரவுதலுக்காக ஆட்சியக் கலைக்க வேண்டும் என்றால் முதலில் பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் ஆட்சி கலைப்பு செய்ய வேண்டும். அவ்வரிசையில் குஜராத் முதல் இடத்தில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.