காந்திநகர்:
இஸ்லாமியர்களின் திருவிழாவோ, குடும்ப நிகழ்ச்சியோ.. உடனே நினைவுக்கு வருவது சுவையான அசைவ பிரியாணிதான். அதுவும் அவர்களது முக்கிய பண்டிகையான ரமலான் அன்று பிரியாணி கண்டிப்பாக இருக்கும்.
ஆனால் குறிப்பிட்ட ஒரு ஊரில் இஸ்லாமியர்கள் எவரும் இறைச்சி சமைப்பதே இல்லை… ரமலான் அன்றுகூட அப்படித்தான்!
குஜராத் மாநிலத்தில் பாவ்நகர் மாவட்டத்தில் இருக்கும் பாலிதானா என்கிற ஊரில்தான் இந்த அதிசயம் நடக்கிறது!
இந்த ஊர் ஜைன மதத்தினரின் புனிதத் தலம் ஆகும். இங்குள்ள மலையில் சில ஆயிரம் ஜைன கோயில்கள் இருக்கின்றன. தொடர்ந்து புதுப்புது கோயில்களும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இங்கு பலநூறு ஜைன துறவிகள் வாழ்கிறார்கள். இவர்கள் சமைப்பதில்லை. ஊருக்குள் சென்று யாசகம் பெற்றுதான் உண்பார்கள். அதுவும் அவர்களுக்கு ஏற்ற முறையில் சமைக்கப்பட உணவைத்தான் உண்பார்கள், குறிப்பாக அசைவம் கூடவே கூடாது.
பொதுவாக ஜைனர்கள் அமைதியானவர்கள். ஆனால் விதிவிலக்காக சில வருடங்களுக்கு முன் இந்த ஊரைச் சேர்ந்த ஜைனர்கள் ஒரு போராட்டம் நடத்தினார்கள். பாலிதானா ஊரில் அசைவம் விற்க, சமைக்க தடை வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை. அந்த கோரிக்கையை குஜராத் அரசு முழுமையாக ஏற்காவிட்டாலும், சில பகுதிகளில் அசைவத்துக்கு தடை விதித்தது. ஆனால் பாலிதானா முழுதும் இறைச்சிக்கு அறிவிக்கப்படாத தடை நிலவுகிறது.
இந்த ஊரில் சுமார் 17,000 இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் வீடுகளிலும் இறைச்சி சமைப்பதில்லை.. ரமலான் அன்றும்!
இந்த தடைக்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்துக்கள் உட்பட பிற மதத்தினரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதே நேரம் இஸ்லாமியர்களில் சிலர், “இந்த ஊர் ஜைனர்களின் புனிதத் தலம். ஜைனர்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தவர்களும் இந்த ஊரில் இருக்கும் ஜைனர் கோயில்களைக் காண வருகிறார்கள். ஊரின் பொருளாதார நிலைக்கு அடிப்படை இதுதான். ஆகவே இதனால் இறைச்சி தடை என்பதை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். நாங்கள் உட்பட இந்துக்கள், கிறிஸ்தவர்கள் எல்லோருமே, இறைச்சி சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் வெளியூருக்குச் சென்று சாப்பிடுவோம்” என்கிறார்கள்.
குறிப்பிட்ட மதத்துக்காக அனைவருக்கும் இறைச்சி தடையா என்கிற சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாகவும் இந்த ஊர் இருக்கிறது. இந்த ஊரின் மலையில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஜைன கோயில்களுக்கு இடையே தர்கா ஒன்றும் உள்ளது. இங்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி ஜைனர்கள் உட்பட அனைத்து மதத்தினரும் வந்து வழிபடுகிறார்கள்.