குஜராத் மாநிலம் பரூச் மக்களவை தொகுதி பா.ஜ.க. உறுப்பினராக இருப்பவர், மன்சூக் வாசவா.
பழங்குடியின மக்களின் தலைவரான இவர், ஆறு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தில் உள்ள 121 கிராமங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் அந்த பகுதியில் வாழும் ஏராளமான பழங்குடியின மக்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, பழங்குடியினரை பாதிக்கும், இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என மன்சூக் வாசவா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதனால் பா.ஜ.க.வில் இருந்து ராஜினாமா செய்வதாக மன்சூக் அறிவித்துள்ளார்.
இதையடுத்து மன்சூக்குக்கு ஆதரவாக, நர்மதா மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் ராஜினாமா செய்த வண்ணம் உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர்கள் விலகி இருப்பது, பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
– பா. பாரதி