காந்திநகர்:
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் சத்ரல் நகர் பகுதியை சேர்ந்தவர் ரோஷன்பீவி (வயது 52). இவரது மகன் ஃபர்சான் (வயது 32). இருவரும் நேற்று கால்நடைகளை மேய்பதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பஜ்ரங்தள் நிர்வாகி ஒருவர் வழிமறித்து தாக்கினார். இதில் அந்த பெண்ணுக்கு கை விரல் முறிந்தது. மகனுக்கு தலை, கையில் காயம் ஏற்பட்டது.
இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த இருவரையும் அருகில் இருந்த அவர்களின் உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து கலோல் தாலுகா போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் 6ம் தேதி அன்று இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த பகுதியான கஸ்பாவாஸ் வழியாக பஜ்ரங்தள் அமைப்பினர் பேரணி நடத்தினர். அப்போது முதல் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று இந்து அமைப்புகள் தடை விதித்துள்ளது.
இதை மீறி வெளியே வந்த தாய், மகனை பஜ்ரங்தள் கும்பல் தாக்கியிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 2வது முறையாக இது போன்ற ஒரு சம்பவம் அங்கு நடந்துள்ளது. இதனால் அமைதி கூட்டம் நடத்த போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.