மகிசாகர், குஜராத்
பாம்புக் கடியால் இறந்த முதியவர் சாகும் முன்பு அந்த பாம்பை கடித்து கொன்றுள்ளார்.
குஜராத் மாநிலம் மகிசாகர் மாவட்டத்தில் அஜன்வா என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இந்த சிற்றூர் வடோதராவில் இருந்து 120 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது விவசாய கிராமம் ஆகும். இங்கு சோளம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் பர்வத் காலா பாரியா என்பவர் சோள விவசாயி ஆவார்.
தற்போது 60 வயதாகும் பாரியா தனது நிலத்தில் விளைந்த சோள மூட்டைகளை லாரிகளில் ஏற்றுவதை மேற்பாரவை செய்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு பாம்பு வரவே அனைவரும் பயந்து ஓடினார்கள். ஆனால் பாரியா அங்கிருந்து செல்லவில்லை. தாம் ஏற்கனவே பல பாம்புகளை பிடித்திருப்பதாக கூறி அந்த பாம்பை கையில் பிடித்துள்ளார்.
அப்போது அந்த பாம்பு அவருடைய கைகளையும் முகத்தையும் கடித்துள்ளது. அதனால் ஆத்திரமடைந்த பாரியா அந்த பாம்பை பதிலுக்கு கடித்து கொன்றுள்ளார். விஷம் ஏறியதால் மயங்கி விழுந்த அவரை அருகில் உள்ள லுனாவாடா நகர மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அவர் உடல்நிலை சீராகாததால் கோத்ரா நகரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
உடலெங்கும் பரவி உள்ள பாம்பு விஷத்தை வெளியே எடுக்க முடியாததால் அவர் மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார். இது குறித்து அஜன்வா கிராம காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.