காந்திநகர்

குஜராத் அரசு சாதாரண குழந்தை உணவுக்கு ரூ. 6 மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைக்கு ரூ.9 என செலவிடுவதாக குஜராத் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று திட்ட ஆணையத் துணைத் தலைவர் ராஜிவ் குமார், “குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு, மின்சாரம் போன்றவற்றில் உள்ள முன்னேற்றம் கல்வித் துறையிலும் சுகாதாரத் துறையிலும் காணப்படவில்லை.  அதில் அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும்”  எனக் கூறி இருந்தார்.

குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் சந்தோக்பென் அரேதியா, குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டச் செலவு  பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தார்.   அவர் தனது கேள்வியில், “ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.4.58/- மற்றும் ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு மாணவருக்கு ரூ.6.41/- மதிய உண்வுக்கு அரசு செலவிடுவதாக கல்வி அமைச்சர் முன்பு தெரிவித்திருந்தார்.   தற்போது மத்திய அரசின் உத்தரவுக்கிணங்க அது மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அது எவ்வாறு மார்றப்பட்டுள்ளது?”  என வினவி இருந்தார்.

அதற்கு எழுத்து மூலம் பதில் அளித்த குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர்  விபவாரிபென் தவே, “தற்போது குழந்தைகள் மதிய உணவுக்கான செலவுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.   ஒவ்வொரு சாதாரண குழந்தைக்கும் அரசு ரூ.6 மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைக்கு ரூ.9 என செலவிடுகிறது.  முன்பு இருந்ததைவிட சுமார் 7.5% உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இவ்வாறு குஜராத் அரசு மாற்றி அமைத்துள்ளது”  என தெரிவித்துள்ளார்.