காந்திநகர்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 2ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு  தெரிவித்து, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்றும், அந்த உத்தரவில் தலையிட தேவையில்லை என கூறி ராகுல் காந்தியின்  மனுவை தள்ளுபடி செய்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல்  பிரச்சாரத்தின் போது கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல்காந்தி  பிரதமர் மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று விமர்சனம் செய்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. குஜராத்தில் மோடி என்ற பெயரில் ஒரு சமூகத்தில் உள்ளதால், ராகுல் பேச்சு, தங்களது சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக,  குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ.வான பூர்னேஷ் மோடி  என்பவர் ராகுல்மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி ராகுலுக்கு  2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் அவர் மேல்முறையீடு செய்யும் வகையில், அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து, ராகுல், மக்களவை செயலகத்தால,  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், ஒரு மனு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், மற்றொன்றில் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரியும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இந்த மனுமீதான விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ராகுல்காந்தி தன் மீதான தண்டனைக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.  இந்த வழக்கில் பலகட்ட விசாரணை நடைபெற்றது.  அதைத்தொடர்ந்து,  கோடை விடுமுறைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியானது. இதனால்,  இன்றைய தீர்ப்பை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், ராகுல் காந்தியின்  மனுவை  தள்ளுபடி செய்து நீதிபதி ஹேமந்த் உத்தரவிட்டார்.

தீர்ப்பில், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்றும், அந்த உத்தரவில் தலையிட தேவையில்லை என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மேலும், ராகுல் காந்தி மீது குறைந்தது 10 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. ‘மோடியின் குடும்பப்பெயர்’ குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மீதான தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்யக் கோர முடியாது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.