அஹமதாபாத்: விவாகரத்து வழக்கின் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போது செய்யப்படும் திருமணம் சட்ட அங்கீகாரம் பெறாது என்று கூறியுள்ள குஜராத் உயர்நீதிமன்றம், அந்த திருமணம் செல்லாது என்று கூறி உள்ளதுடன், இந்த வழக்கில், கீழமை நீதிமன்றம் தந்த விவாகரத்தும் செல்லாது என்றும் உத்தரவிட்டு உள்ளது.
இதன் காரணமாக ஒருவர், விவாகரத்து பெற்றாலும் மேல்முறையீடு நிலையில் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்வது அவசியம் என்பது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே விவாகரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் உள்ள பெண்ணை மறுமணம் செய்த அகமதாபாத் பள்ளி ஆசிரியருக்கு எதிரான வழக்கை விசாரித்த அகமதாபாத் உயர்நீதிமன்றம், இரண்டாவது திருமணம் செல்லுபடியாகாது என்று அறிவித்துள்ளது. விவாகரத்துக்கு எதிரான அவரது முதல் மனைவியின் மேல்முறையீட்டின் முடிவுக்காக காத்திருக்காமல் அவசரமாக மறுமணம் செய்து கொண்டதாகக் கூறியது. இரண்டாவது திருமணத்தை செல்லாததாக்கியதுடன், இவர்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து உத்தரவையும் ரத்து செய்துள்ளது.
முன்னதாக, இந்த வழக்கு மெஹ்சானாவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை மற்றும் அவரது வங்கியாளர் கணவர் ஆகியோரை உள்ளடக்கியது, இவர்களுக்கு பிப்ரவரி 2007 இல் திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற முடிவு செய்தனர். வங்ககி பணியாளரான கணவர் அகமதாபாத் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நிதிமன்றம், அவரது கொடுமைக்கான கூற்றுக்களை ஏற்றுக்கொண்ட பிறகு அவருக்கு நவம்பர் 19, 2024 அன்று, விவாகரத்து வழங்கியது.
இந்த உத்தரவை ஆசிரியையான மனைவி எதிர்த்து, டிசம்பர் 17, 2024 அன்று அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடர்பாக, 2025ம் ஆண்டு ஜனவரி 22 அன்று நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதிலும், கணவர் மார்ச் 3 ஆம் தேதி விவாகரத்து பெற்ற ஒருவரை இரண்டு குழந்தை களுடன் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து மனைவி, விசாரணையின்போது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதையடுத்து, உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், “ஒரு திருமண தகராறில், இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 15 ஐப் பொறுத்தவரை, அந்தக் காலத்திற்குள் ஏதேனும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்து, அதன் பிறகு இரண்டாவது முறையாக திருமணம் செய்வது குறித்து முடிவெடுப்பது கணவரின் பொறுப்பாகும்.
“கணவர் இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 15 இன் கட்டளையை மீறிவிட்டார், மேலும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாகத் தடை விதிக்கப்பட்டி ருந்தாலும், இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். அதனால், இந்த இரண்டாவது திருமணம் தவறானது, அது செல்லாது என்று அறிவித்ததுடன், வங்கியாளரான கணவரின் இந்த முறையற்ற நடத்தை இரண்டாவது மனைவியையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.” அதனால், அவர்களது விவாவகரத்து உத்தரவை ரத்து செய்ததுடன், இந்த விவாகரத்து வழக்கை மீண்டும் விசாரிக்கவும், இரண்டாவது மனைவியை நடவடிக்கைகளில் ஒரு தரப்பாக சேர்க்கவும் குடும்ப நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம், திருமண தகராறுகளில், உங்கள் விவாகரத்து மேல்முறையீடு இன்னும் நிலுவையில் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தில் அவசரப்பட முடியாது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.