குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஎஸ்டி ஆணையர் மகாராஷ்டிரா மாநிலத்தின் மகாபலேஷ்வர் அருகே 620 ஏக்கர் நிலத்தை கைப்பற்றியது அமபலமாகியுள்ளது.

சதாரா மாவட்டம் மஹாபலேஷ்வர் அருகே கண்டாடி பள்ளத்தாக்கில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த ஜடானி கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர ஜிஎஸ்டி ஆணையரான சந்திரகாந்த் வால்வி தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் இந்த நிலத்தை வாங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பரி பகுதியைச் சேர்ந்த சந்திரகாந்த் வால்வி, ஜடானி கிராமத்தில் அரசு திட்டங்கள் வரப்போவதை அடுத்து நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இந்த நிலங்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

ஒரு முழு கிராமத்தையே கையகப்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, வனப் பாதுகாப்புச் சட்டம் 1976, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972 போன்ற பல முக்கியமான சட்டங்கள் தொடர்ந்து மீறிய நிலையில் இது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்தவொரு நவடிக்கையும் எடுக்காமல் இருந்தது எப்படி என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

வன எல்லையில் அனுமதியின்றி கட்டுமானம், தோண்டுதல், மரங்கள் வெட்டுதல், சட்டவிரோத சாலைகள், மின்விநியோகம் போன்றவற்றால் உள்பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விதி மீறல்களால் பல்லுயிர் இழப்பு, காற்று மற்றும் நீர் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதாக உள்ளூர் சமூக ஆர்வலர் சுஷாந்த் மோர் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இந்த விதிமீறல்கள் குறித்து எந்த ஒரு அரசு அதிகாரியும் ஆய்வு செய்ய வருவதில்லை என்றும் சுஷாந்த் மோர் கூறியுள்ளார்.