காந்திநகர்
குஜராத் மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு சட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அது இரு அவையிலும் ஒப்புதல் பெறப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதி இந்த மசோதாவை அங்கீகரித்து சட்டமாக்கி உள்ளார்.
பாஜக ஆளும் குஜராத் அரசு இந்த சட்டத்துக்கு குஜராத் மாநிலத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இந்த சட்டத்தில் ஒரு திருத்தம் செய்துள்ளது. இந்த திருத்தம் குஜராத் மாநில மக்களின் நலனுக்காக செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து முதல்வர் விஜய் ரூபானி, “இந்த சட்டத்தில் உள்ள வருமான வரம்பு, நில உரிமை வரம்பு உள்ளிட்டவைகளை அரசு ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இந்த வரம்புகள் அனைத்தும் 1978ஆம் வருடத்துக்கு முன்பு இருந்து குஜராத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் குடியேறியவர்களுக்கு இந்த இட ஒதுக்கிடு கிடைக்காது. மேலும் வருமானம் மற்றும் நில வரம்பு குறித்து திருத்தம் ஏதும் இல்லை. ஏனெனில் குஜராத் இளைஞர்கள் நல்ல கல்வி பெற வேண்டும் என்பதும் வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதும் அரசின் குறிக்கோள்” என தெரிவித்துள்ளார்.