அகமதாபாத்
மோடி அரசு அறிவிக்க உள்ள பால் இறக்குமதி வரிக்குறைப்பை குஜராத் முதல்வர் மற்றும் அமுல் நிறுவனம் எதிர்த்துள்ளனர்.
சமீபத்தில் டில்லியில் வட்டார பொருளாதார பங்கு நாடுகள் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் சீனா, ஆஸ்திரேலியா, நியுஜிலாந்து, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கலந்துக் கொண்டன. இந்த கூட்டத்தில் இந்திய அரசு சார்பில் நடந்த பேச்சு வார்த்தையில் பால் மற்றும் பால் பொருட்களின் மீதான இறக்குமதி வரியை 5% ஆகக் குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இது இந்திய வர்த்தக நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் அதிக அளவில் பால் மற்றும் பால் பொருட்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள அமுல் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்நிறுவனத்தின் சார்பில் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயிலிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் மத்திய அரசின் இந்த ஆலோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களிடம் உள அதிகப்படியான பொருட்களை இந்தியாவுக்கு வர்த்தகம் செய்ய நினைக்கின்றன. அவற்றின் விலை அதிகமாக உள்ளதால் இறக்குமதி வரியைக் குறைக்கக் கோரிக்கை விடுக்கின்றன. ஏற்கனவே ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இதே கோரிக்கையை விடுத்து வருகின்றன. தற்போது இந்தியாவில் போதுமான அளவு பால் மற்றும் பல்பொருட்களான தயிர், சீஸ், பனீர் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
அவ்வாறு இருக்க இந்த வரிக்குப்பால் வெளிநாட்டு வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க விரும்புவார்கள். இதனால் நமது நாட்டில் உற்பத்தியாகும் பால் பொருட்கள் கட்டுமளவில் விற்பனை சரிவைச் சந்திக்கும். நமது நட்டு உற்பத்தியானது நமது நாட்டுத் தேவையை விட அதிகமாகவே உள்ளதால் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த வரிக்குறைப்பு தேவையற்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு ஏற்றுமதி ஆர்வலர், “இந்தியாவைப் போல் இல்லாமல் நியுஜிலாந்தில் ஏறாளமன கால்நடைகள் உள்ளன. மக்கள் தொகையை விடக் கால்நடைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அங்குப் பால் அதிக அளவில் உள்ளன. இதனால் 93% பால் மற்றும் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பாலுக்கான கிராக்கி குறைந்தால் அவர்கள் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சமையல் எண்ணெய்யின் இறக்குமதி வரியை குறைத்ததால் அந்த தொழில் கடும் பாதிப்புக்குள்ளானதை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர். மோடி அரசின் இந்த ஆலோசனைக்குப் பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக அமுல் நிறுவனம் அமைந்துள்ள குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி இந்த ஆலோசனையைக் கடுமையாக எதிர்த்துள்ளார்.