அகமதபாத்: நோபல் பரிசு பெற்ற இந்தியர்களில் அதிகம் பேர் பிராமணர்கள், வித்தியாசமான டிஎன்ஏவை கொண்டவர்கள் பிராமணர்கள் என்று குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கூறியிருக்கிறார்.
குஜராத் மாநிலம், அடலாஜ் நகரில் மெகா பிராமணர் பிசினஸ் மாநாடு என்ற பெயரில் பிராமணர் சங்க மாநாடு நடைபெற்றது. விழாவில் குஜராத் முதலமைச்சர் விஜய்ரூபானி கலந்து கொண்டார்.
அம்மாநில சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி பேசுகையில் பிராமணர்களின் உடல்களில் வித்தியாசமான டிஎன்ஏ இருப்பதாக கூறினார். விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
நாங்கள் பிராமணர்களாக பிறந்திருக்கிறோம். பிராமணர்களின் டிஎன்ஏ நமக்கு இருக்கிறது. மற்றவர்களை ஆசிர்வதிக்கவும், உலக மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்கள் பிராமணர்கள்.
அரசியலமைப்பு சட்டம் எப்படி இயற்றப்பட்டது தெரியுமா? அதை இயற்றியவர் அம்பேத்கர் இல்லை. ஒரு பிராமணர் தான் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றி இருக்கிறார்.
,அரசியலமைப்பு சட்டத்தின் வரைவு எப்படி தயாரிக்கப்பட்டது? 60 நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களை படித்து அதை தயாரித்தது யார்? எல்லோரும் நினைப்பது போன்று அம்பேத்கர் அல்ல அதை தயாரித்தது. ஒரு பிராமணர் தான் தயாரித்தார். அவர் பெயர் பெனகல் நரசிங்க ராவ்.
இந்த விஷயத்தை அம்பேத்கரே கூறியிருக்கிறார். அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அவர் பேசும் போது, இந்த பெருமை எல்லாம் இந்த பி.என்.ராவைச் சேரும் என்று அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்.
பிராமணர்கள் எப்போது மற்றவர்களை முன்னுக்கு நிறுத்தி, பின்னால் இருந்து செயல்படுபவர்கள் என்பது வரலாறு. அப்படித்தான் அம்பேத்கரை முன் நிறுத்தியவர் பி.என்.ராவ்.
நோபல் பரிசுகளை இதுவரை 8 இந்தியர்கள் பெற்றுள்ளனர். அதில் 7 பேர் பிராமணர்கள். அண்மையில் அதை வென்ற அபிஜித் பானர்ஜி ஒரு பிராமணர்.
நண்பர்களே, ஆப்ரிக்கா சென்று பாருங்கள். அங்குள்ள மக்களின் நிறத்தையும், அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம். சீன மக்களை பாருங்கள் அவர்களின் கண்கள் திறந்திருக்கிறதா? மூடி இருக்கிறதா என்று அறியமுடியாது. இதே போன்று தான் ஜப்பானியர்களும்.
ஆனால் நீங்கள் இந்தியா வந்தால், பஞ்சாப் , அரியானா எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். மனிதர்கள் திடகாத்திரமாக இருப்பார்கள். ஆனால் மாடுகள் சிறியவைகளாக இருக்கும்.
இப்படி தான்… நாடு முழுவதும் வித்தியாசமான காலநிலை, மனிதர்கள் இருப்பார்கள். அதற்கு காரணம், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் டிஎன்ஏ தான் என்று பேசினார்.