டில்லி,

குஜராத் சட்டமன்ற தேர்தல் மற்றும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட இருப்பதாக டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகல் 1 மணிக்கு டில்லியில் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் பதவிக்காலம் ஜனவரி 2018ல் முடிவடைய இருப்பதால் இரு மாநிலத்துக்கும் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 12ந்தேதி அறிவிப்பதாக கூறியது.

ஆனால், அன்று இமாச்சல பிரதேச தேர்தல் அறிவிப்பு மட்டும் வெளியிட்டது. குஜராத் தேர்தல் தேதிக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும், டிசம்பர் 18ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றும்  இந்திய தேர்தல் ஆணைய தலைவர் அச்சல்குமார் ஜோதி அறிவித்தார்.

மேலும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கும் டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், குஜராத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்காதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.  காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். முன்னாள் தேர்தல் கமிஷனரும் குற்றம் சாட்டியிருந்தார்.

மோடியின் குஜராத் சுற்றுப்பயணம் மற்றும்  சலுகை அறிவிப்புக்காக தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல், மத்திய அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று பகிரங்கமாக  குற்றம் சாட்டப்பபட்டது.

இதற்கிடையில் கடந்த வாரம் குஜராத் சென்ற பிரதமர் மோடி ஏராளமான சலுகைகளையும், பல புதிய திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.

அதைத்தொடர்ந்து குஜராத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

தற்போது  குஜராத் மாநிலத்தில் பாரதியஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 182 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதன்  ஆயுட்காலம் ஜனவரி 22, 2018 அன்றும் முடிவடைகிறது.

இந்நிலையில்  குஜராத் மற்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.