லக்னோ:
5குழந்தைகளுடன் தொடங்கிய பள்ளியில் இன்று 55ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி உலகிலேயே மிகப்பெரிய பள்ளி என கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய பள்ளியாக இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள தனியார் பள்ளி தேர்வாகி, கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அங்குள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியில், 2019-20 ஆம் கல்வி யாண்டில் 55,547 மாணவர்கள் படிக்கின்றனர். அப்பள்ளி, உலகிலேயே மிகப்பெரிய பள்ளி என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து, அந்த பள்ளி, தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சி.எம்.எஸ் முதன்முதலில் கின்னஸ் புத்தகத்தில் 1999 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டதாகவும், அப்போது பள்ளியில் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை 22,612 ஆக இருந்தது. என்றும், தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு, ‘உலகின் மிகப்பெரிய பள்ளி’ என்ற சாதனையை படைத்துள்ளது என்று அறிவித்து உள்ளது.
இதுகுறித்து கூறிய பள்ளியின் நிறுவனர் ஜெகதீஷ் காந்தி, ”இந்தப் பள்ளியை வெறும் 5 மாணவர்களைக் கொண்டு தொடங்கியதாகவும், இன்று உலகிலேயே பெரிய பள்ளியாக மாறி உள்ளது. ஆனால், தான் இந்த சாதனையை படைக்கும் என கற்பனை செய்து பார்த்ததுகூட கிடையாது என்றவர், தங்களுக்கு பள்ளி 18 இடங்களில் கிளைகளைக்கொண்டுள்ளதாகவும், சுமார் 56 ஆயிரம் மாணவர்கள் இங்கு படிக்கின்றனர் என்றும் தெரிவித்து உள்ளார்.
எங்கள் பள்ளிக்கு அவர்களின் குழந்தைகளை நம்பி அனுப்பிய பெற்றோரின் நம்பிக்கையாலும் ஆசியாலுமே இது அனைத்தும் சாத்தியமாகி உள்ளது. நாங்கள் மாணவர்களின் கல்வி, சமூக மற்றும் ஆன்மிக அறிவை சமமாக வளர்த்தெடுக்கிறோம். அவர்களுக்கு மனிதத்தையும், அமைதி மற்றும் ஒற்றுமையின் முக்கியத்தையும் போதிக்கிறோம். கல்வி அறிவில் உயர் தரத்துடன் விளங்கும் எங்கள் மாணவர்கள், சர்வதேசத் தேர்வுகளில் தேர்ச்சி அடையும் அளவுக்குத் திறன் வாய்ந்தவர்களாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.