சென்னை: கிண்டி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு மற்றும் மேம்படுத்தும் பணி மே மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லும் வழியில் உள்ள சென்னை கிண்டி ரயில்நிலையம் எப்போதும் மக்கள் கூட்டத்தில் சிக்கி திணறும். இது சென்னையில் மத்திய பகுதியில் இருப்பதால், இந்த ரயில் நிலையம் மூலம் தினசரி பல லட்சம் பேர் பயடைந்து வருகின்றனர்.
கிண்டி ரயில் நிலையத்தைச் சுற்றிலும் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களும், தேசிய பூங்கா, காந்தி மண்டபம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களும், அதிக தொழிற்சாலைகளை கொண்ட தொழிற்பேட்டையும் கொண்டு விளங்குகிறது. சென்னை நகரின் நுழைவு வாயிலாக காணப்படும் கிண்டி, ரயில் நிலையம், மெட்ரோ மற்றும் பேருந்து நிலையத்தை ஒரே பகுதியில் கொண்டுள்ளது. அதனால், நகரின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் மையப்புள்ளியாக கிண்டி ரயில் நிலையம் விளங்குகிறது
இந்த ரயில் நிலைம் வழியாக தினசரி புறநகர் ரயில் முதல் வந்தேபாரத் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் என குறைந்த பட்சம் 300க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையம் ரூ.13 கோடி செலவில் பயணிகளின் வசதிக்காக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணி கடந்த 2024ம் ஆண்டு தொடங்கிய நிலையில், இன்னும் முற்றுபெறவில்லை. இதனால் காரணமாக விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் சில ரயில்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் வாகனங்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. பாதசாரிகள் செல்வதற்கான பிரத்யேக பகுதி, பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் நடைமேடை, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பயணிகளின் வாகன நிறுத்தம், லிப்ட் (மின்தூக்கி) கூரை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதுடன், பயணச்சீட்டு முன்பதிவு மையம் மற்றும் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல பயணிகளுக்கு தேவையான கழிப்பறை கட்டடம், மற்றும் ரயில் நிலைய முகப்பு பகுதி அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த அனைத்துப் பணிகளைம் மே மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.