பல்கலைக் கழக மானியக் குழு – தேசிய தகுதித்தேர்விற்கான(UGC-NET) கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை(NTA) வெளியிட்டுள்ளது. முதுகலைப் பட்டம் பெற்றவர்களும், முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களும் இத்தேர்வை எழுதலாம். இத்தேர்வு குறித்த சிறு வழிகாட்டல்…
யுஜிசி – நெட் கட்டாயம்
நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றவும், பிஎச்டி ஆய்வு நிகழ்த்த இளநிலை ஆய்வாளர் ஊக்கத்தொகை பெறவும் யுஜிசி – நெட் தேர்வில் தேர்ச்சி பெறுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை
ஜீன் மற்றும் டிசம்பர் மாதம் என ஆண்டிற்கு இருமுறை இத்தேர்வு நடைபெற்று வருகிறது. இருதாள்களை கொண்டிருக்கும் இத்தேர்வில் முதல் தாளில் 50 கேள்விகளுக்கும், இரண்டாம் தாளில் 100 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். கேள்வி ஒன்றுக்கு 2 மதிப்பெண்கள் என இரு நாள்களுக்கும் 300 மதிப்பெண்கள். தேர்வு காலம் 3 மணி நேரமென ஒரு தாளுக்கு ஒன்றரை மணி நேரம் அனுமதி வழங்கப்படும்.
பாடத்திட்டம்
தாள் 1 இல் ஆராய்ச்சி நெறிமுறைகள் மற்றும் பொது அறிவு சார்ந்து கேள்விகள் அமையும். 2 ஆம் தாளில் யுஜிசி வரையறுத்துள்ள பாடங்களில் ஆய்வாளர் தேர்வு செய்த விருப்பப் பாடத்திலிருந்து கேள்விகள் அமையும். இத்தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லை.
2020 ஆம் ஆண்டிற்கான முதல் தேர்வை, தேசிய தேர்வு முகமை ஜூன் மாதம் 15 முதல் 20 வரை நடத்தவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மார்ச் முதல் வாரத்தில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க ஏப்ரல் 16 இறுதி நாளாகும். COVID-19 தாக்குதலால் நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதி நாள் நீட்டிக்கப்படும் என நம்பப்படுகிறது. இத்தேர்விற்குரிய இலவச பயிற்சி வகுப்புகளை பல்கலைக் கழகங்கள் இலவசமாக நடத்துகின்றன.