சென்னை: காவலர்கள் பணி நேரத்தில்  செல்போன் பயன்படுத்தக்கூடாது என ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பணி நேரத்தின்போது அரசு ஊழியர்கள் செல்போன் உபயோகப்படுத்துவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் இனி பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது, மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணி நேரத்தில் செல்போனில் அரட்டை அடிப்பவர்கள் மீது, அரசு ஊழியர் நடத்தை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆவடி காவல் ஆணையர் உத்தரவைத் தொடர்ந்து மற்ற மாநகர மற்றும் மாவட்ட காவல்ஆணையர்களும் சுற்றறிக்கை அனுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.