டில்லி,

நாட்டில் அமல்படுத்த இருக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு வலுத்துள்ளது.

ஆனால், மத்திய அரசு பிடிவாதமாக ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி-ஐ அமல்படுத்தும் விதமாக நாளை நள்ளிரவு பாராளுமன்றத்தை கூட்டி உள்ளது.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஜிஎஸ்டி குறித்து உரையாற்றுவார்கள் என்றும் அதையடுத்து ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறி உள்ளார்.

இதையொட்டி நாளை (30-ந்தேதி) நாடாளுமன்றத்தில் நள்ளிரவில் நடைபெற உள்ள  ஜி.எஸ்.டி. அறிமுக சிறப்பு நிகழ்ச்சியை புறக்கணிக்க காங்கிரஸ் உள்பட  எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ள தாக  கூறப்படுகின்றன.

ஏற்கனவே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், கம்யூனிஸ்டு தலைவர்கள் நாங்களும் கலந்துகொள்ள மாட்டோம் என்று அறிவித்து உள்ளது.

“ அரசின் நிர்வாக எந்திரமே ஜி.எஸ்.டி. வரிக்கு இன்னும் முறையாகத் தயாராகவில்லை. அதற்குள் அரசு ஏன் ஜி.எஸ்.டி.வரியை நடைமுறைப்படுத்த ஏன் அவசரப்படு கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

மார்க்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “ஜி.எஸ்.டி.ஐ காங்கிரஸ் அரசு அறிமுகம் செய்யும் போது எதிர்த்த பா.ஜனதா கட்சி, இப்போது அதே ஜி.எஸ்.டி. வரியை எதிர்க்க ஏன் அவசரம் காட்டுகிறது’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

பெரும்பாலான  எதிர்க்கட்சிகள் ஜிஎஸ்டி நள்ளிரவு சிறப்புக்கூட்டத்தை புறக்கணிக்கும் வகையில் கருத்து கூறியிருப்பதால், காங்கிரசும் அவர்களுடன் இணைந்து புறக்கணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் நாளை நள்ளிரவு நடைபெறும் ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவ கவுடா உள்ளிட்டோருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர்கள், அனைத்து எம்.பி.க்கள், மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.