புதுடெல்லி: ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தவணையில், மாநிலங்களுக்கு ரூ.14 ஆயிரத்து 103 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது மத்திய நிதி அமைச்சகம்.
நிதி அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது; கடந்த 2017, ஜூலை 1ம் தேதி பலமுனை வரி விதிப்பிற்கு பதிலாக, நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரி அமலுக்கு வந்தது.
இந்த வரி விதிப்பால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை 5 ஆண்டுகளுக்கு ஈடுசெய்வதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
அதனடிப்படையில், இதுவரை, மாநிலங்களுக்கு ரூ.2.45 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்தாண்டு பிப்ரவரியில், மாநிலங்களுக்கு 2019 – 20ம் நிதியாண்டின் அக்டோபர் மாத தவணையாக ரூ.19 ஆயிரத்து 950 கோடி வழங்கப்பட்டது. தற்போது, நவம்பர் மாத தவணையாக ரூ.14 ஆயிரத்து 103 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்தவகையில், மாநிலங்களுக்கு, மொத்தமாக ரூ.34 ஆயிரத்து 53 கோடி வழங்கப்பட்டுள்ளது. விரைவில், டிசம்பர் மற்றும் 2020ம் ஆண்டு ஜனவரி மாத நிலுவைத்தொகை, தவணை முறையில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.