மும்பை

ள்ளூர் மக்களுக்கு 80% வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி  உள்ளிட்டு வரி திரும்பக் கிடைக்கும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் வெளி மாநில பணியாளர்கள் பணி  புரிவது அதிகரித்து வருகிறது.   இதனால் பல உள்ளூர் வாசிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.   சிவசேனா இயக்கத்தை அமைத்த பால் தாக்கரே இதற்காகக் கடுமையாகப் போராட்டங்கள் நடத்தி வந்தார்.   அதையொட்டி கடந்த 1968 ஆம் வருடம் மகாராஷ்டிர மாநிலம் உள்ளூர் வாசிகளுக்கு 80% வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு பிறகும் வெளி மாநிலத்தவர் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர்.  இது இங்குள்ள மக்களுக்கு கடும் அதிருப்தியை அளித்தது.  குறிப்பாக சிவசேனா கட்சி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது சிவசேனா கட்சி பாஜகவுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறது.  இக்கட்சியின் மூத்த தலைவரும் மாநில தொழில்துறை  அமைச்சருமான சுபாஷ் தேசாய் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது சுபாஷ் தேசாய், “மண்ணின் மைந்தர்களுக்கே பணி என்னும் அடிப்படையில் அனைத்து  நிறுவனங்களும் உள்ளூர் மக்களுக்கு 80% வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும்.  அவ்வாறு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி திரும்ப அளிக்கப்படும் .  இதற்காக விரைவில் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட உள்ளது.

இந்த அரசாணையின் மூலம் ஒப்பந்த  தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் வேலை  வாய்ப்பிலும் 80% உள்ளூர் வாசிகளுக்கு 80% வேலை வாய்ப்பு அவசியம் அளித்தாக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க உள்ளது.  தேவையானால் ஆந்திர மாநில அரசு சமீபத்தில் சட்டம் இயற்றியது போல் இது குறித்து மகாராஷ்டிராவிலும் சட்டம் இயற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.