டெல்லி: நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.45 லட்சம் கோடி என்றும், இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விட 11 சதவிகிதம் அதிகம் என்றும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
ஒவ்வொரு மாதமும் ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவல் வெளியிடப் பட்டு உள்ளது.
நவம்பர் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ. 1,45,867 கோடியாக உள்ளது, இது கடந்த ஆண்டு நவம்பரில் இருந்த ஜிஎஸ்டி வசூலை விட 11 சதவீதம் அதிகம் என்று நிதி அமைச்சகம் வியாழக்கிழமை (டிசம்பர் 1) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரூ.1.45 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் வசூலில், மத்திய ஜிஎஸ்டி ரூ.25,681 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.32,651 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ₹77,103 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.38,635 கோடி) மற்றும் செஸ் ரூ.10,433 கோடி பொருட்கள் இறக்குமதி மூலம் ரூ.817 கோடி வசூலிக்கப்பட்டது). சிஜிஎஸ்டிக்கு ரூ.33,997 கோடியும், ஐஜிஎஸ்டியில் இருந்து எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.28,538 கோடியும் வழக்கமான தீர்வாக அரசு செட்டில் செய்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் வழக்கமான தீர்வுகளுக்குப் பிறகு மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ.59,678 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.61.189 கோடியும் ஆகும். மேலும், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.17,000 கோடியை நவம்பரில் மத்திய அரசு வெளியிட்டது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“நவம்பர் 2022 மாத வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 11 சதவீதம் அதிகமாகும், இது ரூ. 1,31,526 கோடியாக இருந்தது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இம்மாதத்தில், சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 20 சதவீதம் அதிகமாகவும், உள்நாட்டு பரிவர்த்தனையின் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த ஆதாரங்களில் இருந்து வந்த வருவாயை விட 8 சதவீதம் அதிகமாகவும் இருந்தது.
தொடர்ந்து 9-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாகவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.