சென்னை:
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குரூப்-2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பணிகளில் காலியாக உள்ள வேலைகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு வைக்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சில இடைத்தரகர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகளுடன் ரகசிய கூட்டு வைத்து செயல்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் குறிப்பிட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியவர்கள் முதல் இடங்களை பிடித்த நிலையில், அது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதுகுறித்து விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஏற்கனவே இந்த வழக்கில் 14 பேர் கைதான நிலையில், டி.என்.பி.எஸ்.சி. டைப்பிஸ்டாக பணிபுரிந்த மதுராந்தகத்தைச் சேர்ந்த மாணிக்கவேல்(26), கூரியர் வேன் டிரைவராக வேலைபார்த்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம்(31) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
இந்த நிலையில், குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதி ஆகியுள்ளது. குரூப்-2ஏ தேர்விலும் தரவரிசை பட்டியலில் முதல் 55 இடங்களுக்கு 30 இடங்களிலும், 100 இடங்களுக்குள் 37 இடங்களிலும் ராமேசுவரம் தேர்வு மையத்தில் எழுதியவர்கள் இடம்பிடித்திருந்தனர்.
இதுதொடர்பான குரூப்-4 தேர்வு முறைகேட்டில் இடைத்தரகர் திருக்குமரனிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, குரூப் 2ஏ முறைகேடு விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர. தலைமை செயலக ஊழியர் திருஞானசம்பந்தன், காஞ்சிபுரம் பத்திரபதிவு அலுவலர் வடிவு மற்றும் ஆனந்தன் ஆகிய மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது, திருவண்ணாமலையை சேர்ந்த சுதாராணி, சென்னையை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் சுதாராணி, திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். விக்னேஷ், சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத் துறையில் பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இடைத்தரகர் ஜெயகுமாரின் கார் ஓட்டுநரான சம்பத் என்பவரின் மனைவி சுதாராணி என்று தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும் என்றும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்வதோடு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் பாயும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.