சென்னை:
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முறை கேடாக தேர்வு எழுதி அரசு பணி பெற்ற அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குரூப்-4 முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குரூப்-2 தேர்வு முறைகேட்டினால், ஏராளமானோர் அரசு பதவி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு அம்பலமாகி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குரூப்-2 தேர்வு முறைகேடும் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 20க்கும்மேற்பட்டோர் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக ராமேசுவரம் பகுதியில் 6 பள்ளிகளில் தேர்வு எழுதி யவர்களில் சந்தேகத்துக்குரிய 42 பேரின் விவரங்களை சிபிசிஐடி போலீ ஸாரிடம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஏற்கெனவே கொடுத்திருந்தனர். அதில், பலரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் மற்றவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதனால் முறைகேடாக பணம் காடுத்து அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர். தற்போது உயர் பதவியில் அதிகாரிகளாக இருக்கும் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவ விடுப்பு போன்ற நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு தலைமறைவாகி இருப்பதாகவும், அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளதாகவும் சிபிஐ சிஐடி காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையில் சென்னை எழிலகத்தில் உதவியாளராக பணிபுரியும் மகாலட்சுமி என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி மூலம் ஜெயக்குமாரிடம் பணம் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரிய வந்தது.
இந்த மாபெரும் முறைகேட்டுக்கு இடைத்தரகர்களாக செயல் பட்ட ஜெயக்குமாரும் முதல் நிலை காவலர் சித்தாண்டியும் தொடர்ந்து தலைமறை வாக உள்ள நிலையில், அவர்களை சிபிசிஐடி போலீஸார் வலைவீசி தொடர்ந்து தேடி வருகின்றனர்.
முறைகேடாக பணியில் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டு நிலையில்,அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இடைத்தரகர் ஜெயக்குமார் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங் கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.