சென்னை: குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
முதன்மை தேர்வு எழுதிய 1888 பேரில், 190 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல். நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 7ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குருப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள 190 பேரின் பட்டியலை தேர்வாணையத்தின் இணையதளத்தில் பார்க்கலாம்.
2024 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி, 90 காலிப்பணியிடங்களுக்கு வெளியானது. குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர் 16 இடம், போலீஸ் டிஎஸ்பி- 23, வணிகவரித் துறை உதவி ஆணையர்- 14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து, குரூப் 1 முதல்நிலை தேர்வு 2024ம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதினர். இதற்கான முடிவுகள் செப்டம்பர் 2 ஆம் தேதி வெளியானது. இதில் 1,988 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்கள் முதன்மைத் தேர்விற்கு தகுதி பெற்றனர்.
இதையடுத்து 2024ம் அண்டு டிசம்பர் மாதம் 10 முதல் 13 ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின்ஸ் தேர்வு நடைபெற்றது. முதன்மைத் தேர்வினை எழுத, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,888 பேர் அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் 57 நாட்களில் அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 190 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், நேரடி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Physical Certificate Verification and Oral Test) வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு வரும் 07.04.2025 தேதி முதல் 09.04.2025 தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
தேர்வர்கள் அனைத்து சான்றிதழ்களுடன் நேரடியாக கலந்துகொள்ள வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வின் தேதி மற்றும் நேரம் குறித்த தனிப்பட்ட தகவல் தேர்வாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் முடிவுகளை https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை நேரடியாக பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.