சூரத்:
குஜராத் மாநிலம் சூரத்நகரில், தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், மண மகனின் தந்தையுடன் மணமகளின் தாய் எஸ்கேப்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது பிரபல இந்தி நடிகரான அனுபம் கெர் நடித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘ஹம் ஆப்கே ஹை கவுன்’ இந்தி படத்தை நினைவுபடுத்தி இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இந்த படத்தில், மணமகன் மோஹ்னிஷ் பெஹ்லின் மாமா அலோக் நாத் மற்றும் மணமகள் ரேணுகா ஷாஹானின் தாய் ரிமா ஆகியோர் திருமணம் செய்துகொள்வது போன்ற காட்சிகளை அமைக்கப்பட்டிருக்கும். இருவரும் கல்லூரி நாட்களில் காதலர்கள் என்பதும், விதிவசத்தால் இருவரம் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு, பின்னர் வாழ்வின் இறுதிகாலத்தில் இருவரும் இணைவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்…
அதுபோல ஒரு சம்பவம் தற்போது சூரத்தில் அரங்கேறி உள்ளது. இதில் மணமக்களின் பெற்றோர் இருவரும் தலைமறைவி உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சூரத் அருகே உள்ள கட்டர்கம் பகுதியில் இரு குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இளைஞிக்கு இதிருமணம் செய்ய பெரியோர்களால் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் திருமணம் நடைபெறும் என தேதியும் குறிக்கப்பட்டது.
இந்த நிலையில், மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. மணமகனின் தந்தை, ராகேஷ் (வயது 48), (பெயர் மாற்றப்பட்டது), ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினனர் என்றும், அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஜவுளி தொழிலதிபர் என்று கூறப்படுகிறது. அதுபோல மணப்பெண்ணின் தாயான சுவாதி (வயது 46) (பெயர் மாற்றப்பட்டது) ஆகிய இருவரும் கடந்த 10ந்தேதி முதல் காணாமல் போயுள்ளதாக வும், அவர்களை கண்டுபிடிக்கக் கோரி இருவீட்டார் தரப்பிலும் காவல்துறையிலும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
பிப்ரவரி மாதம் தங்களது குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பே பெற்றோர்கள் இருவரும் ஓடிப்போன தகவல், இரு குடும்பத்தினரிடையே மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்த விசாரணையில், ஓடிப்போன மணமகனின் தந்தையும் மணமகளின் தாயும் ஏற்கனவே தங்களது இளம்வயதில் காதலர்களாக இருந்ததாகவும், தற்போது அவர்களின் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க கடந்த சில மாதங்களாக ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அவர்கள் மீண்டும் தங்களது இளம் நாட்களின் காதலை புதுப்பித்துக்கொண்டு எஸ்கேப்பாகி உள்ளதாக கூறப்படுகிறது.
பெற்றோர்களின் இந்த செயல், இரு குடும்பத்தினரையும் மிகவும் சங்கடமான சூழ்நிலையில் விட்டுவிடுகிறது.