சென்னை:

துரையில் சட்டவிரோதமாகவும், அரசு புறம்போக்கு நிலங்களிலும் கிரானைட் குவாரிகள் செயல்படுவதால் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்றைய விசாரணையின்போது, மதுரை கிரானைட் குவாரிகளில் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது உண்மை என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கிரானைட் வழக்கை விசாரிக்க, அப்போதைய மதுரை கலெக்டர் சகாயத்தை  விசாரணை ஆணையராக நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன் காரணமாக, சகாயம் அந்த பகுதிகளில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், சட்டவிரோதமாக செயல்பட்ட கிரானைட் குவாரிகளால்  ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.  மேலும் இதை தடுப்பது குறித்தும்  193 பரிந்துரைகளையும் அவர் கொடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து விசாரணை குறித்து தமிழக செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது  தமிழக அரசு சார்பாக தலைமை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்திருந்தார்..

அதில்,  ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் செய்த 193 பரிந்துரைகளில், சுமார் 119 பரிந்துரைகளை அரசு  ஏற்றுக்கொள்வ தாகவும், கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக எழுந்த புகார்  குறித்து, போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அதில்,  ஒரு குழந்தையின் எலும்புக்கூடு உள்பட 4 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐகோர்ட்டு கோரியபடி, ஒருங்கிணைந்த அறிக்கை தாக்கல் செய்ய மேலும்  6 வார காலஅவகாசம் தேவை என்று கோரிக்கை விடப்பட்டது.

ஆனால், கிரானைட் வழக்கில்  நரபலி தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுவதால், சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று  சகாயம் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர்  அமர்வு,   தமிழக அரசு ஒருங்கிணைந்த அறிக்கையை தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்பதால், விசாரணையை ஜூலை 11-ந் தேதிக்கு தள்ளிவைப்பதாக உத்தரவிட்டனர்.

மேலும், இதுதான் தமிழக அரசுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை செய்தனர்.