சென்னை:

கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை செய்து வந்த சகாயம் தலைமையிலான குழுவை கலைக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை அருகே அரசுக்கு சொந்தமான மற்றும் தனியார் இடங்களில் உள்ள கல் குவாரிகள் அனுமதியின்றி வெட்டி எடுக்கப்படுவதாகவும், இதன் காரணமாக அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்  சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு கள் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து, கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி  சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதைத்தொடர்ந்து, சகாயம் தலைமையிலான குழுவினர் மதுரை பகுதிகளில் ஆய்வு செய்தனர். மதுரை  மேலூர் அருகே சட்டவிரோதமாக ஏராளமான ஏக்கரில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததால், தமிழக அரசுக்கு 1 லட்ரூசத்து.16 ஆயிரம்  கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று  கடந்த 20‌15-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்‌தில் ஐஏஎஸ் அ‌‌திகாரி சகாயம் தலைமையிலான குழு தனது அறி‌க்கையை தாக்கல் செய்தது.

இதனிடையே இந்த குழுவில் ஓய்வு பெற்ற தாசில்தார் மீனாட்சி சுந்தரம் பணியாற்றினார். அவருக்கு சம்பளமாக மாதம் ரூ.20 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது.  ஆனால் இந்த சம்பளத்தை அவருக்கு கடந்த 8 மாதங்களாக தமிழக அரசு வழங்கவில்லை.

அவருக்கு சம்பளம் வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி சகாயம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்றுமுன்தினம்  தலைமை நீதிபதி இந்‌திரா பானர்ஜி, நீதி‌பதி எம். சுந்த‌ர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ‌

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால், இந்த குழுவுக்காக தமிழக அரசு சார்பில் மொத்தம் ரூ.58 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இப்போது ரூ.5 லட்சம் கூடுதலாக சம்பளம் கேட்கிறார்கள்.  தாசில்தார் மீனாட்சி சுந்தரம் ஓய்வு பெற்றுவிட்டார் என்று தெரிவித்தார்.

கிரானைட் அதிபர்க‌ள் சங்கம்‌ ‌சார்பில் ஆஜ‌ரான வழக்க‌‌றிஞர்,‌ அறிக்கை தாக்கல் செய்ததுடன் சகாயம் குழுவி‌ன் ‌பணி முடிந்து விட்டது.

ஒரு லட்சத்து 16‌ ஆயி‌ரம் ‌கோடி ரூபாய்க்கு ‌கிரானைட் முறைகேடு ‌நடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதில் உ‌ண்மை இல்லை ‌என்று வாதாடினார்.

இதற்கு நேற்று  பதிலளித்த சகாயம்,  இந்த முறைகேட்டில் எனது அறிக்கையை யாரும் சந்தேகப்பட வேண்டாம். எனது அறிக்கையைச் சந்தேகப்படுவது எனது நேர்மையைச் சந்தேகப்படு வதற்கு சமம்.

விசாரணை குழுவின் பணி முடிவடைந்துவிட்டது என கிரானைட் அதிபர்கள் கூறுவதை ஏற்க முடியாது. குழுவின் பணி முடிவடைந்ததை ஐகோர்ட்டு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து வாதாடிய தமிழக அரசு வழக்கறிஞர்,  உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதும் சம்பளம் வழங்கப்படும் என கூறினார். அதைத்தொடர்ந்து வழக்கு அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிமன்றம்  சகாயம் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவை வரும் 31 ஆம் தேதிக்குள் கலைக்க உத்தரவிட்டுள்ளது.

வரும் 31 -ம் தேதிக்குள் இதுவரை நடந்த விசாரணை அறிக்கை அனைத்தையும் சமர்பிக்கவும் ஆய்வுக்காக வழங்கப்பட்ட கணினி உள்ளிட்ட உபகரணங்களையும் திருப்பி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நோக்கம் நிறைவேறி விட்டதால், குழுவை கலைக்கலாம் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.