பிறந்து ஒருமாதமே ஆன குழந்தை இரண்டு நாட்களுக்கு முன் தண்ணீர் தொட்டியில் பிணமாகி மீட்கப்பட்டது அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பச்சிளம் குழந்தையின் தாத்தா வீரமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த வீரமுத்து, ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா.

சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இவர்களுக்கு கடந்த 38 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் சங்கீதா தனது பெற்றோர் ஊரான உட்கோட்டையில் இருந்து வந்த நிலையில் அதிகாலையில் தனது குழந்தைக்கு பசியாற்றி தூங்க வைத்துவிட்டு அவரும் தூங்கி உள்ளார்.

குழந்தை காணாமல் போனதையடுத்து பதறிய தாய் சங்கீதா அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் எங்கும் குழந்தை கிடைக்கவில்லை. இதனையடுத்து வீட்டுக்கு பின்புறம் பார்த்தபோது அங்கு இருந்த தண்ணீர் பேரலில் போர்வையுடன் குழந்தை மூழ்கடிக்கப்பட்டு இறந்த நிலையில் குழந்தை மீட்கப்பட்டது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் சங்கீதா கதறி துடித்துள்ளார். இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்று சிசுவின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இதுதொடர்பாக சங்கீதாவின் தந்தை வீரமுத்து மற்றும் தாய் ரேவதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் குழந்தையை வீரமுத்து கொன்றது அம்பலமானது.

சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்று ஜோசியக்காரன் கூறியதை நம்பி குழந்தையை கொன்றதாக வீரமுத்து கூறியதை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், அவருக்கு ஜோசியம் சொன்ன ஜோசியக்காரன் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.