புனே: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நோபல் பரிசுபெற்ற அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி என்றும், இந்திய வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட அவரது பொருளாதாரத் திட்டத்தை ஏற்கும் தேவை இல்லையென்றும் கூறியுள்ளார்.
நரேந்திர மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த அபிஜித் பானர்ஜி, அவர் வகுத்த பொருளாதாரத் திட்டத்திற்காக சமீபத்தில் நோபல் பரிசு பெற்றிருக்கிறார். அவர் 2019 தேர்தலின் போது காங்கிரஸ் முன் வைத்த நியாய் என்ற குறைந்தபட்ச வருமானத்திற்கான திட்டத்தை வடிவமைத்தவர் ஆவார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஊடகவியாலளர்களிடம் பேசும்போது, “நான் அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு பெற்றதற்காக அவரை வாழ்த்துகிறேன். உங்களுக்குத் தெரியும் அவர் ஒரு முழுமையான இடதுசாரி எண்ணம் கொண்டவர் என்றாலும், நோபல் பரிசு பெற்றது இந்தியராக நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்றுதான்“, என்றார்.
மேலும், “அவர் வரைந்த பொருளாதாரக் கொள்கையை இந்திய மக்கள் ஏற்கவில்லை என்பதைத் தங்களின் வாக்குகளின் மூலம் காட்டியுள்ளபோது அவர் கூறுவதை ஏற்கவேண்டும் என்பதில் அர்த்தமில்லை“, என்றார்.