டில்லி

ர் இந்தியா நிறுவன பங்குகளை வாங்க யாரும் முன் வராததால் மத்திய அரசே தொடர்ந்து நடத்துமென விமான போக்குவரத்து துறை செயலர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியா தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது.   நிறுவனத்தின் கடன் தொகை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.   இதை ஒட்டி மத்திய அமைச்சரவைக் குழு ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது.

அத்துடன் இந்த நிறுவனத்தின் 5 துணை நிறுவனப் பங்குகளையும் 37 சொத்துக்களையிம் விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டது.   இவ்வகையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குகளை விற்க விலைப்புள்ளி கோரி விண்ணப்பம் அளிக்க அரசு விளம்பரம் செய்தது.

இதற்கான கடைசி தேதி மே 14 என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.   அதன் பிறகு மே 31ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது.   ஆனால் கடைசி தேதிக்கு ஒரு நாளே பாக்கி உள்ள நிலையில் இது வரை எந்த ஒரு நிறுவனமும்  ஏர் இந்தியா பங்குகளை வாங்க விண்ணப்பிக்கவில்லை.

இதனால் விமான போக்குவரத்து துறை செயலர் சௌபே, “ஏர் இந்தியா பங்குகளை வாங்க விண்ணப்பிக்கும் தேதி இதற்கு மேல் நீட்டிக்கப்பட மாட்டாது.   இந்த நிறுவன பங்குகளை வாங்க யாரும் முன் வரவில்லை எனில் அரசே ஏர் இந்தியாவை தொடர்ந்து நடத்தும்” என தெரிவித்துள்ளார்.