டில்லி

நாட்டின் மூன்று ராணுவப் படைகளையும் ஒரே தலைமையின் கீழ் கொண்டு வர அரசு ஆலோசனை செய்து வருகிறது.

இந்திய ராணுவம் மூன்று படைகளைக் கொண்டது.   காலாட் படை, கடற்படை, விமானப்படை என ஒவ்வொரு படைக்கும் தனித் தனி தலைமை அதிகாரிகள் உள்ளனர்.   ஒரு படையின் தலைமை மற்றொரு படைக்கு உத்தரவிட முடியாமல் உள்ளது.   இதனால் அனைத்து படைகளையும் ஒரே தலைமையின் கீழ் கொண்டு வர அரசு ஆலோசனை செய்து வருகிறது.

கடந்த 2001 ஆம் வருடம் அக்டோபர் மாதம் இதே போல ஒரு முயற்சி எடுக்கப்பட்டது.   ஆனால் அப்போது இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது.  ஆனால் மூன்று படைகளும் மூன்று வெவ்வேறு தலைமையின் கிழ் உள்ளதால் ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு திசையில் செல்வதாக பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.    இதனால் ஒரே தலைமை இருந்தால் ஒரே உத்தரவின் கீழ் முப்படைகளும் செயல்பட முடியும் என அரசு கருதுகிறது.

இதன் முதல் கட்டமாக மூன்று படைகளையும் ஒருங்கிணைக்கும் பணியை அரசு தொடங்கி உள்ளது.   இந்த ஒருங்கிணைப்பின் மூலம் ஒரு பிரிவின் தலைவர் மற்ற பிரிவுகளுக்கும் உத்தரவிடலாம் என்னும் வகையில் விதிகளை திருத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.     இது மூன்று படைப் பிரிவுகளையும் ஒரே தலைமையின் கீழ் கொண்டு வருவதற்கான முதல் படி என சொல்லப்படுகிறது.