டில்லி
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நன்மைகள் ஆகியவை குறித்த விவர ஏடு விரைவில் அரசு வெளியிட உள்ளது.
பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் செய்வது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், ”பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து இது வரை சுமார் 48 முறை வெளிநாட்டுப் பயணம் செய்துள்ளார். அவர் பயணம் செய்ய தனி விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 1592 கோடி செலவிடப்பட்டுள்ளது” என தெரிய வந்தது.
பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்து வந்தது. இந்த 4 வருடங்களில் வெளிநாட்டு முதலீடுகள் 67% அதிகரித்ததாக அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அது குறித்த விவரங்களை அரசு வெளியிடாமல் இருந்தது.
தற்போது அரசு தரப்பில் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து விவர ஏடு ஒன்றை வெளியிட உள்ளது. இந்த விவர ஏட்டில் பிரதமர் மோடி சென்ற வெளிநாடுகள் மற்றும் அவர் யார் யாரை சந்தித்தார் போன்ற விவரங்கள் இடம்பெறும். அத்துடன் அவர் சென்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதலீடுகள் ஆகியவையும் இட்ம் பெற உள்ளது.
இது போல 1500 ஏடுகள் அச்சடிக்கப்பட உள்ளன. அந்த விவர ஏடுகள் அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் ஆகியவர்களுக்கு அளிக்கப்பட உள்ளன. கடந்த 2014 ஆம் வருடம் மே மாதத்தில் இருந்து செய்யப்பட்ட பயணங்கள் குறித்த விவரங்கள் இந்த ஏட்டில் இடம் பெற உள்ளன.