டெல்லி: முதல் முறையாக டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய மசோதாவை மத்திய அரசு தயார் செய்து வருகிறது. இந்த மசோதா 18ந்தேதி முதல் தொடங்க இருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
டிஜிட்டல் உலகின் அதிவேகமான வளர்ச்சி காரணமாக, சமூக வலைதளங்களும், இணையதள செய்தி ஊடகங்களும் புற்றீசல் போல புறப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதை கட்டுப்படுத்த மோடி தலைமையிலான மத்திய அரசு சட்டம் கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. அதற்கான மசோதாவை உருக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த புதிய மசோதா, வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், அச்சு மற்றும் இதழியல் மசோதாவில் டிஜிட்டல் ஊடகத்தையும் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்த மசோதாவில் என்ன கூறப்பட்டு உள்ளது என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, மசோதா அமலுக்கு வந்த 90 நாட்களுக்குள் அனைத்து டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் அனைத்தும் முறைப்படி, பதிவு செய்ய வேண்டும். டிஜிட்டல் ஊடகத்தை நடத்துவோர் செய்தி பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்விதம் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் வெளியிடும் செய்திகளில் விதிகள் மீறப்பட்டால் அவற்றின் மீது நடவடிக்கை அல்லது அவற்றின் லைசென்ஸை ரத்து செய்யும் வகையில் புதிய சட்டம் இருக்கும் என தெரிகிறது.
மேலும், டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் மூலமாக பரப்பப்படும் எந்த செய்தியும், இன்டர்நெட், கம்ப்யூட்டர் அல்லது மொபைல் நெட்வொர்க் மூல மாக பரப்பப்படும் செய்திகளில் இடம்பெறும் தகவல்கள், வீடியோ காட்சிகள் மற்றும் கிராபிக் காட்சிகள் உள்ளிட்டவை அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
பத்திரிகை, இதழியல் பதிவு குறித்து பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கு மாற்றாக இந்த புதிய மசோதா இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே , தகவல் தொழில் நுட்ப சட்டம் 2019 மூலம் டிஜிட்டல் ஊடகங்களைக் கட்டுப்படுத்த மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கை மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.