டில்லி
இந்திய அரசு நாணயம் உற்பத்தி செய்வதை நிறுத்தியதால் அந்த இடங்களில் பணி புரிவோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாக ரொக்கப் பரிவர்த்தனை குறைந்துக் கொண்டு வருகிறது. ஆன்லைன் பரிவர்த்தனை செய்வதால் ரூபாய் நோட்டுக்களோ நாணயங்களோ தேவை இன்றி உள்ளது. இதனால் நாணயங்களின் தேவை குறைந்துள்ளது. நாணயம் அடிக்கும் தொழிற்சலையில் தற்போது ரு.1, ரூ. 2 மற்றும் ரூ. 5 மதிப்பிலான நாணயங்கள் கோடிக்கணக்கில் அடிக்கப்பட்டு குவிந்துள்ளது. அந்த நாணயங்களுக்கு உடனடி தேவை இல்லாததால் ரிசர்வ் வங்கி அந்த நாணயங்களை தொழிற்சாலையிலேயே வைத்துள்ளது.
இந்தியாவில் நான்கு நாணயம் அடிக்கும் இடங்கள் உள்ளது. இந்த நாணயங்கள் அடிக்கும் ஆலைகளின் அதிகாரி ஒருவர், “எங்களிடம் தற்போது 252.8 கோடி நாணயங்கள் உள்ளன. ரிசர்வ் வங்கி இவைகளை எடுத்துக் கொள்ளும் வரை நாணயங்கள் அடிக்கத் தேவை இருக்காது. அதனால் நாங்கள் நாணய உற்பத்தியை நிறுத்தி உள்ளோம்” என அறிவித்துள்ளார்.
இந்த நாணய உற்பத்தி நிறுத்தத்தினால் நாட்டில் நாணய தட்டுப்பாடு ஏற்படாது. ஆனால் இங்கு பணி புரியும் ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளது. அதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆக நேரிடலாம் என தெரிய வருகிறது. இந்த நாணய அடிப்பு ஆலைகளில் உள்ள 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலை குறித்து ஊழியர்களின் தொழிற்சங்கம் அரசுக்கு விளக்கம் கேட்டுள்ளது.
அரசின் பதிலை எதிர்பார்த்து அச்சத்துடன் ஊழியர்கள் காத்துக் கொண்டிருப்பதால் அரசு இதற்கு ஆவன செய்ய வேண்டும் என தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.