புதுடெல்லி:
இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு பிறகு ஒரு பரபரப்பான சூழலே நிலவி வருகிறது. எல்லைப் பிரச்னைக்கு பிறகு சீன செயலிகளை எல்லாம் இந்தியா தடை செய்தது. சீனப் பொருட்களை தடை செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கருத்துகள் தெரிவித்தனர். ஐபிஎல் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்த விவோ நிறுவனமும் விலகிக் கொண்டது. இந்நிலையில் சீன முகவரியில் இருந்து மர்ம விதைகள் பார்சல் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு சீன முகவரியில் இருந்து பார்சல் வருவதாகவும், அதில் மர்ம விதைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா இது உயிரி ஆயுதமாக இருக்கலாம் என்றும், இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கோ, விவசாய சூழலியலுக்கோ கேடு உருவாக்க திட்டமிட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.
மேற்கொண்டு மர்ம பார்சல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இது தொடர்பாக இந்திய விதைத் தொழிற்துறை கூட்டமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மர்ம விதை தொடர்பாக தற்போது எச்சரிக்கை மட்டுமே கொடுக்கப்படுகிறது. மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது. எனவே இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீன முகவரியுடன் ஏதாவது விதை பார்சல் வந்தால் அதனை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளனர்.