டில்லி:

லோக்சபாவில் 2017-18ம் ஆண்டின் மானிய துணைநிலை கோரிக்கைகள் அடங்கிய 4வது நிதி ஒதுக்கீடு ஆவணங்களை நாடாளுமன்ற விவகார துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இன்று சமர்ப்பித்தார்.

அதில், அமைச்சகங்கள், அரசு துறைகளில் உள்ள சேமிப்புகள் என்ற அளவில் ரூ.8.21 லட்சம் கோடி நிதி மற்றும் ரூ.85 ஆயிரத்து 315 கோடி நிகர ரொக்கம் என மொத்தம் ரூ.9.06 லட்சம் கோடி அளவிலான நிதியை கூடுதல் செலவினத்திற்கு ஒதுக்க நாடாளுமன்ற ஒப்புதல் கோரப்பட்டது. இதில், ஜி.எஸ்.டி. அமல் மற்றும் மத்திய விற்பனை வரி நீக்கம் ஆகியவற்றால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பினை ஈடு செய்ய வழங்கப்படும்.

நிகர ரொக்க தொகையான ரூ.85,315 கோடியில் 71 சதவீதம் என்ற அளவில், ரூ.61,215.58 கோடி வருவாய் துறைக்கு ஒதுக்கப்படும். அவற்றில் ரூ.58,999 கோடி மாநிலங்களுக்கான வருவாய் இழப்பு தொகையாகவும், ரூ.1,384 கோடி மத்திய விற்பனை வரி இழப்பீடாகவும் வழங்கப்படும். மேலும், ரூ.15,065.65 கோடி மானிய உதவி மற்றும் முதலீட்டு சொத்துகள் உருவாக்கத்திற்கு செலவிடப்படும்.

அதன்பின்னர் ரூ.9,260 கோடி நிதி பாதுகாப்பு துறை ஓய்வூதியம் மற்றும் ரூ.5,721.90 கோடி சந்தை கடன்கள் மற்றும் கஜானா பில் ஆகியவற்றுக்கு வட்டி செலவுக்கு ஒதுக்கப்படும்.